மதுரை, ஜூலை 9: தமிழகத்திலேயே அதிகபட்சமாக மதுரையில் 106 டிகிரி வரை நேற்று வெயில் கொளுத்தியது. மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சில தினங்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மலை மாவட்டங்களில் மட்டும் ஓரளவு வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருந்தாலும், மற்ற மாவட்டங்களில் குறிப்பாக தென் மாவட்டங்களில் தினந்தோறும் வெயிலின் அளவு 100ஐ கடந்து சதமடித்து வருகிறது.
இதன்படி மதுரை விமான நிலையத்தில் நேற்று 106 டிகிரி வரை வெயில் பதிவானது. மாநகர் பகுதியில் 102 டிகிரி வரை வெயில் சுட்டெரித்தது. அதே நேரம் ஜூன் 1ம் தேதி முதல் நேற்று வரையிலான ஒரு மாத காலத்தில் நகர் மற்றும் புறநகர் என இரண்டு பகுதிகளையும் சேர்த்து 10.6 மில்லி மீட்டர் அளவு மழை மட்டுமே பெய்துள்ளது. இது இயல்பை விட 79 சதவீதம் குறைவு என இந்திய வானிலை ஆய்வு மைய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வரைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கிமீ வேகத்தில் இன்று வீசும்.