கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு பணியால் மதுரையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்: மாநகர போலீசார் அறிவிப்பு
மதுரை, செப். 30: மதுரை முனிச்சாலை பகுதியிலிருந்து இன்று (செப்.30) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக மாநகர போலீசார் அறிவித்துள்ளனர். இதுகுறித்து மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை நகரில் காமராஜர் சாலையில் கழிவுநீர் கால்வாயின் மேற்புறத்தில் அமைக்கப்பட்ட காங்கிரீட் தளம் பழுதடைந்துள்ளது. இதனை சீரமைக்க புதிய காங்கிரீட் தளம் அமைக்கும் பணி தொடங்கப்பட்ட நிலையில், கீழவெளிவீதி சந்திப்பு முதல் அரசமரம் பிள்ளையார் கோயில் சந்திப்பு வரையிலான சாலையில் பணிகள் நிறைவடைந்து. அடுத்த கட்டமாக முனிச்சாலை சந்திப்பிலிருந்து, விளக்குத்தூண் சந்திப்பிற்கு முந்தைய சாலை சந்திப்பு வரையுள்ள சாலையில் தற்போது காங்கிரீட் தளம் அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது. எனவே, இச்சாலை வழியாக செல்லும் பொது போக்குவரத்து தற்காலிகமாக மாற்றியமைக்கப்படுகிறது.
இதன்படி முனிச்சாலை சந்திப்பிலிருந்து விளக்குத்தூண் சந்திப்பிற்கு முந்தைய சாலை சந்திப்பு வரையிலான சாலை தற்காலிகமாக மூடப்படுகிறது. இவ்வழியாக கீழ வெளிவீதி செல்ல வேண்டிய அனைத்து வாகனங்களும் முனிச்சாலை சந்திப்பிலிருந்து இடது புறம் திரும்பி, பழைய குயவர் பாளையம் சாலை வழியாக செயின்ட் மேரீஸ் சந்திப்பு சென்று அங்கிருந்து செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மஹால் ரோட்டிலிருந்து செயின்ட் மேரீஸ் சந்திப்பு பழைய குயவர் பாளையம் சாலை வழியாக முனிச்சாலை சந்திபிற்கு செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும், வாசன் சந்திப்பு, கீழவாசல் சந்திப்பு மற்றும் காமராஜர் சாலை வழியாக செல்ல வேண்டும்.