சோழவந்தான், செப். 30: சோழவந்தான் பஸ் நிலைய பகுதிகளில் உள்ள கடைகள் மீது மண்ணெண்ணை நிரம்பிய பாட்டிலை வீசிய போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.சோழவந்தான் பேருந்து நிலையத்தில் நேற்று காலை மண்ணெண்ணெ நெடியுடன் ஒரு பாட்டில் சிதறிக்கிடந்தது. இது குறித்து விஏஓ திலீபன் கொடுத்த புகாரின் பேரில் சோழவந்தான் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, சோழவந்தான் பேட்டை பகுதியைச் சேர்ந்த நாராயணன் மகன் விக்னேஷ்(22) மற்றும் சங்கங்கோட்டை செல்வம் மகன் பிரவீன் (19) ஆகியோர், நேற்று முன்தினம் இரவு போதையில் ஒரு பாட்டிலில் மண்ணெண்ணை நிரப்பி, அங்குள்ள கடைகளின் மீது வீசியது தெரியவந்தது.
இதையடுத்து சோழவந்தான் எஸ்எஸ்ஐ அழகர்சாமி வழக்கு பதிவு செய்து விக்னேஷை கைது செய்தார். தலைமறைவான பிரவீனை தேடி வருகிறார். அதிக போதையில் இருந்த இருவரும் விளையாட்டாக மண்ணெண்ணையை பாட்டிலில் நிரப்பி குண்டு போல் வீசியதாக விக்னேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும், இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.