மதுரை, செப். 30: காலாண்டு விடுமுறையில் பள்ளிகளில் நடத்தப்படும் சிறப்பு வகுப்புகளை ரத்து செய்ய வேண்டும் என, முதன்மை கல்வி அலுவலரிடம், இந்திய மாணவர்கள் சங்கத்தினர் நேற்று மனு அளித்தனர். தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை மற்றும் பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் முடிந்து, விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து வரும், அக்.6ல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இந்த விடுமுறையை பயன்படுத்தி பல தனியார் பள்ளி நிர்வாகங்கள் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகின்றனர். இதனால், மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விடுமுறை நாட்களில் எந்த பள்ளிகளும் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிகளின் முதல்வர்கள், தாளாளர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அதனையும் மீறி வகுப்புகள் நடத்தப்படுவதை கண்டித்து, இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின், ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டு, மதுரை மாநகர் மாவட்ட மாணவர் சங்கத்தினர் சார்பில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை நேரில் சந்தித்து, அரசு அறிவித்த நாள் வரை மாணவர்களுக்கு விடுமுறை வழங்ககோரியும், சிறப்பு வகுப்புகளை ரத்து செய்யக்கோரியும் மனு அளிக்கப்பட்டது. இதில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநகர் மாவட்ட தலைவர் டீலன் ஜெஸ்டின், மாவட்ட குழு உறுப்பினர்கள் பிரகலாதன், சக்திவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.