மதுரை, அக். 29: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய விவசாயிகள் மதுரை மாவட்டத்தில் 48 நெற்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டதாக கூறுகிறார்கள். ஆனால் ஒரே ஒரு நெல் கொள்முதல் மட்டும் தான் திறக்கப்பட்டுள்ளது என அதிகாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அவர்கள் பேசுகையில், ‘‘மதுரை அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை திறக்க வேண்டும். விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் கரும்புகளை தஞ்சாவூருக்கு எடுத்துச் சென்று அங்கு எடை போடுவதால் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது. மதுரையில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் கரும்புகளை மதுரை மாவட்டத்திலேயே அளவீடு செய்து கொண்டு செல்ல வேண்டும். வைகை பாசன பகுதிகளில் கழிவுநீர் கலப்பதால் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவோம். அப்போது விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்யாமல் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்’’ என்றனர்.
