மாவட்டத்தில் உள்ள சாலைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும்: ஆய்வுக் கூட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் பேச்சு
மதுரை, நவ. 26: மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் அருண் தம்புராஜ் தலைமை வகித்தார். மதுரை கலெக்டர் பிரவீன் குமார் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் அருண் தம்புராஜ் பேசியதாவது, ‘‘மதுரை மாவட்டத்தில் 347 உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்துள்ளது. இதில் நிலுவையில் உள்ள மனுக்களை கள ஆய்வு செய்து உடனடியாக மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆதரவற்றோர், தனித்து வாழும் முதியோர், ஒற்றை பெற்றோர் குடும்பங்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், மனநலம் குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறப்புக் குறைபாடுடைய குழந்தைகள் போன்ற சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்திடும் மக்கள் அனைவரும் தாயுமானவர் திட்டம் கீழ் அடையாளம் காணப்பட்டு கணக்கிடும் பணியினை விரைந்து முடிக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைகளையும் தூய்மையாக பராமரிக்க வேண்டும். பிற பணிகளுக்காக சாலையில் தோண்டப்படும் பள்ளங்களை பணி முடிந்ததும் உடனடியாக சரி செய்ய வேண்டும்.
ஊரக பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும். மழை காலங்களில் பொதுப்பணித்துறை, மின்வாரியம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும். தடையற்ற மின்சாரம் வழங்க போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சி வார்டுகளில் தூய்மை பணிகளை தொடர்ந்து டெங்கு தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். குடிநீர் சீராக வழங்கி அவ்வப்போது ஏற்படும் பழுதுகளை உடனடியாக சீர் செய்ய வேண்டும்’’என்றார்.
இக்கூட்டத்தில் மதுரை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வானதி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கலெக்டர் பிரவீன் குமார் தலைமையில் சட்டம்-ஒழுங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் எஸ்பி அரவிந்த், டிஆர்ஓ அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

