மதுரை, செப். 14: மதுரை தமுக்கம் மைதானம் மாநாட்டு மையத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்கம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. குளிரூட்டப்பட்ட அரங்கில், தினசரி காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் இதில், 232 முன்னணி பதிப்பகங்களின் அரங்குகள் இடம் பெற்றுள்ளன.
குறிப்பாக புத்தகத்திருவிழாவின் 61ம் எண் அரங்கில் சூரியன் பதிப்பகத்தின் ஸ்டால் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆன்மிகம் தலைப்பில் அணையா அடுப்பு, கிரிவலம், சாய், அய்யா வைகுண்டர், திருப்பங்கள் தரும் திருக்கோயில்கள், அருணகிரி உலா, பக்தி தமிழ் உள்ளிட்ட நூல்களும், மருத்துவம் என்ற தலைப்பில் உடம்பு சரி இல்லையா, குழந்தைகள் வளர்ப்பு வழிகாட்டிக்கான செல்லமே, மருத்துவ ஜோதிடம், நல்வாழ்வு பெட்டகம், பெண்களை பாதிக்கும் நோய்கள் உள்ளிட்ட நூல்களும் இடம் பெற்றுள்ளன.
முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறன் எழுதிய திராவிட இயக்க வரலாறு, மாநில சுயாட்சி நூல்களும், சிவந்த மண், உலகை மாற்றிய தோழிகள், திருப்புமுனை, குறிஞ்சி டூ பாலை, குட்டிச்சுவர் சிந்தனைகள், ஆகாயம் கனவு அப்துல்கலாம், கங்கையில் இருந்து கூவம் வரை போன்ற நூல்களுடன், இலக்கியம், சமையல், சினிமா, நாவல், அரசியல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 180க்கும் மேற்பட்ட அரிய பல புத்தகங்கள் வாசகர்கள் தேர்ந்தெடுக்க வசதியாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. காலம்தோறும் படித்து பாதுகாக்கும் பொக்கிஷமான இப்புத்தகங்களை 10 சதவீத தள்ளுபடி விலையில் வாசகர்கள் வாங்கிச் செல்கின்றனர்.
காலை முதலே சூரியன் பதிப்பக அரங்கில் தமிழறிஞர்கள், குழந்தைகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பலரும் விரும்பி வந்து வாங்கிச் செல்லும் இடமாக சூரியன் பதிப்பக அரங்கு அமைந்துள்ளது. புத்தக திருவிழாவையொட்டி நேற்று நடந்த நிகழ்ச்சியில் திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி கருணாநிதி பங்கேற்று தெற்கில் எழுச்சி என்ற தலைப்பில் பேசினார். பின்னர் அவர் 61ம் எண் அரங்கில் அமைந்துள்ள சூரியன் பதிப்பக ஸ்டாலிற்கு வந்து பார்வையிட்டு, பல்வேறு புத்தகங்களை ஆர்வமுடன் வாங்கிச்சென்றார். இதையடுத்து ஏராளமானோர் சூரியன் பதிப்பகத்திற்கு வந்து அரிய பல நூல்களை உற்சாகமாக வாங்கிச் சென்றனர். இதற்கிடையே சூரியன் பதிப்பக அரங்கிற்கு, மதுரை புத்தக திருவிழாவில் நல்ல வரவேற்பு உள்ளது.