மதுரை, அக். 12: சன் குழுமத்தின் ஓர் அங்கமான சூரியன் எப்எம் மதுரை காளவாசல் சிக்னலில் நடத்திய டிராஃபிக்ல ஜாமிங் என்ற புதுமையான விழிப்புணர்வு நிகழ்ச்சி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. சன் குழுமத்தின் ஓர் அங்கமான சூரியன் பண்பலை வானொலி நேரலை நிகழ்ச்சிகளை மட்டுமின்றி, மக்கள் நலனில் அக்கறை கொண்டு, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது. அந்த வகையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில், டிராஃபிக்ல ஜாமிங் என்ற பெயரில் புதுமையான விழிப்புணர்வு நிகழ்ச்சியை கடந்த அக்.10ம் தேதி மதுரை காளவாசல் சிக்னலில் நடத்தியது.
மதுரை மாநகர போக்குவரத்து இணை ஆணையர் வனிதா மேற்பர்வையிலும், காளவாசல் பகுதி போக்குவரத்து ஆய்வாளர் தங்கமணி மற்றும் எஸ்ஐ சந்தனகுமார் முன்னிலையிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சாலை விதிகளை மதித்து வாகனம் ஓட்டி வந்தவர்களை கவுரவப்படுத்தும் வகையில் அவர்களுக்கு இனிப்பு சுவையுடைய ‘பன் பட்டர் ஜாம்’ வழங்கப்பட்டது. இதனால் இந்த நிகழ்ச்சிக்கு ட்ராஃபிக்ல ஜாமிங் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் சாலை விதிகளை மதித்து வாகனம் ஓட்டாதவர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு இனிப்புகள் வழங்கி, BG நாயுடு நிறுவனத்தார் சிறப்பித்தனர். இந்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு வழங்க, சூரியன் பண்பலை வானொலி உடன் மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை இணைந்து செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.