திருமங்கலம், அக். 12: திருமங்கலம் சியோன்நகரை சேர்ந்தவர் ரவீந்திரன்(66). சமையல் மாஸ்டர். இவர் தனது மகள் சத்யாவுடன் கடந்த 8 ஆண்டுகளாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ரவீந்திரன் திருமங்கலத்திற்கு டூவீலரில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது சியோன்நகர் சர்ச் அருகே மெயின் ரோட்டில் குறுக்கே கடக்க முயன்ற போது மதுரையிலிருந்து திருமங்கலம் நோக்கிச்சென்ற டூவீலர் அவரது வாகனம் மீது மோதியது.
இதில் தூக்கிவீசப்பட்ட ரவீந்திரன் தலையில் படுகாயமடைந்தார். மற்றொரு டூவீலரில் வந்த வலையபட்டியை சேர்ந்த முத்து என்பவரும் காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வழியிலேயே ரவீந்திரன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்து குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.