சோழவந்தான், ஆக. 12: சோழவந்தான் அருகே உரிய நேரத்திற்கு வராததால் அரசு டவுன் பஸ்சை பெண்கள் சிறைபிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்குட்பட்டது ஊத்துக்குளி. இந்த கிராமத்தில் சுமார் 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்காக மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மதுரை அரசு போக்குவரத்து கழக பணிமனை தரப்பில் இருந்து இயங்கிய இந்த பஸ்கள், கடந்த 1ம் தேதி முதல் சோழவந்தான் பணிமனைக்கு மாற்றப்பட்டது. அதிலிருந்து உரிய நேரத்திற்கு டவுன்பஸ்கள் வரவில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து சோழவந்தான் அரசு பணிமனைக்கு இந்த கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர். இருப்பினும் இப்பிரச்னையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன்படி நேற்று காலைவரவேண்டிய டவுன் பஸ் வராததால், கல்லூரி, பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் வேலைகளுக்காக வெளியூர் செல்வோர் என பலரும் கடும் அவதியுற்றனர். இவ்வழியே சென்ற மினி வேன், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் அவர்கள் தங்கள் பயணத்தை மேற்கொண்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த கிராமத்து பெண்கள் நேற்று காலை வழக்கம்போல் தாமதமாக வந்த டவுன் பஸ்சை சிறை பிடித்தனர். தகவலறிந்த காடுபட்டி எஸ்ஐ ரகு, சோழவந்தான் பணிமனை மேலாளர் முத்துராமன், திமுக தொழிற்சங்க நிர்வாகிகள் பாலசுப்பிரமணியம், அமிர்தராஜ், பாலமுருகன், ஊத்துக்குளி திமுக கிளை செயலாளர் ராஜாராமன் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இனி உரிய நேரத்தில் பஸ் வந்து செல்லும் என அவர்கள் தரப்பில் உறுதிஅளிக்கப்பட்டது. இதையடுத்து சிறைபிடித்த பேருந்தை பெண்கள் விடுவித்தனர். பெண்களின் இந்த திடீர் நடவடிக்கையால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.