ஒன்றிய, மாநில அரசுகள் தரப்பில் இணையதள பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தலாம்: ஐகோர்ட் கிளை அறிவுறுத்தல்
மதுரை, டிச. 11: இணையதள சேவைகள் தொடர்பாக, பொதுமக்களுக்கு வழங்கும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் மேம்படுத்த வேண்டும் என, ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. மதுரையை சேர்ந்த விஜயகுமார் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: ஒன்றிய தொலைத்தொடர்புத்துறை 2017ல் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது. அதன்படி இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் (ஐஎஸ்பி) வாடிக்கையாளர்கள் விழிப்புணர்வுக்காக ‘பேரன்டல் விண்டோ சர்வீஸ்’ வசதி ஏற்படுத்த வேண்டும்.
இதனால் புளூவேல் கேம், ஆபாச இணைய தளங்கள் உள்ளிட்ட கவனத்தை திசை திருப்பும் தேவையற்ற, தவறான விஷயங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கலாம். இது தொடர்பான பிரச்னைகளுக்கு தேசிய, மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷனில் புகார் செய்யலாம். இப்பிரச்னைகளில் நடவடிக்கை எடுக்க மற்றும் இழப்பீடு வழங்க உத்தரவிடுவதற்கான அதிகாரம் குழந்தைகள் கமிஷனுக்கு உள்ளது. இது தொடர்பாக ஒன்றிய அரசின் சுற்றறிக்கை அடிப்படையில் விழிப்புணர்வு மற்றும் ‘பேரன்டல் விண்டோ சர்வீஸ்’ வசதி ஏற்படுத்தாத இணையதள சேவை நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஒன்றிய அரசின் சுற்றறிக்கையை சரியாக நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறி உள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. பின்னர், ‘இணைய தளங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தேவையற்ற இணைய தளங்கள் முடக்கப்படுகின்றன என ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழிப்புணர்வு ஏற்படுத்துவதை அவர்கள் மேலும் திறம்பட மேற்கொள்ள வேண்டும். வழக்கு பைசல் செய்யப்படுகிறது’ என கூறி வழக்கை முடித்து வைத்தனர்.


