மதுரை, செப். 2: மதுரையில் நடைபெற உள்ள புத்தக திருவிழாவில் மக்கள் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள வேண்டும் என எம்பி சு.வெங்கடேசன் கூறியுள்ளார். மதுரை மாவட்டத்தின் 20வது புத்தக திருவிழா வரும், 5ம் தேதி முதல் 15ம் தேதி வரை தமுக்கம் மைதானத்தில் உள்ள கலையரங்கில் சிறப்பாக நடைபெற உள்ளது. இதையொட்டி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே வாசிப்பு திறனை வளர்க்கும் விதமாக ‘மாமதுரை வாசிக்கிறது’ எனும் நிகழ்ச்சி மதுரையில் உள்ள எழுத்தாணிக்கார தெரு பகுதியில் நேற்று நடந்தது. இதில், மதுரை எம்பி வெங்கடேசன், கலெக்டர் பிரவின்குமார், மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன் மற்றும்
அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்து எம்பி வெங்கடேசன் கூறியதாவது: உலகம் முழுவதும் புத்தக கண்காட்சி நடத்தப்படுகிது என்றாலும், மதுரை புத்தக திருவிழாவிற்கான முன்னோட்ட நிகழ்வு எழுத்தாணிக்கார தெருவில் நடத்தப்படுவது சிறப்பு. ஏனெனில், இந்த தெரு எழுதுவதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டது. இங்கே ஏடுகள் எழுதப்பட்டு பிரதிகள் எடுக்கப்பட்டிருக்கிறது. திருக்குறள், சீவகசிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம் என, ஏடுகளில் எழுத்துக்களை உருவாக்கிய முன்னோர்கள் பலரும் வசித்து, 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான எழுத்துடன் தொடர்புடைய தெரு என்பது, மதுரையில் மட்டுமே உள்ளது.
எனவே, மதுரை மக்கள் தங்களின் வாசிப்பு திறனை வளர்த்துக்கொள்ள புத்தக திருவிழாவில் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார். கலெக்டர் பிரவின்குமார் கூறுகையில்,‘‘புத்தக கண்காட்சியில் 120 அரங்குகள் வரை அமைக்கப்பட உள்ளன. இநத கண்காட்சி அனைத்து வயதினருக்கும் சென்றடையும் வகையில் அரங்குகள் அமைக்கப்படும். இதன்படி குழந்தைகள், போட்டி தேர்வர்கள், மாணவ, மாணவிகள், இலக்கிய ஆர்வலர்களுக்கு என, தனித்தனியாக அமைகிறது. இதனுடன், கலை நிகழ்ச்சிகள், கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. மாலை நேரத்தில் பட்டிமன்றமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது,’’ என்றார்.