மதுரை, செப். 2: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர் முகாமில், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை வழங்கினர்.
பொதுமக்களின் குறைகளை கோரிக்கை மனுக்களாகப் பெற்று உடனடியாக தீர்வு காணும் வகையில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன்படி நேற்று கலெக்டர் பிரவின்குமார் தலைமையில் நடந்த முகாமில், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று, பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை வழங்கினர். இதற்கிடையே டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை களையக் கோரி மதுரையில் உள்ள டாஸ்மாக் ஊழியர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
மாவட்டத்தின் சில பகுதிகளில் காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டம் நேற்று முதல் அமலாகியுள்ளது. நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாமலும், கால அவகாசம் வழங்காமலும் உடனடியாக செயல்படுத்துவது குழப்பத்தை ஏற்படுத்தும. விற்பனை விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலிக்கும் போது தேவையற்ற பிரச்னைகள் ஏற்படும். மது வாங்குவோரிடம் இருந்து திரும்ப பெற்ற நிலையில், உடையும் பாட்டில்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து தெளிவு படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவில் அவர்கள் வலியுறுத்தி இருந்தனர்.