பாடாலூர், ஜூலை 11: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் மருதையாற்றில் இருந்து அனுமதியின்றி லாரிகளில் மணல் ஏற்றி செல்லப்படுவதாக ஆலத்தூர் தாசில்தார் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில், புஜங்கராயநல்லூர் மருதையாற்றில் கிராம உதவியாளர் கிருத்திகா கடந்த 9ம் தேதி சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை மடக்கி நிறுத்தினார். இதையடுத்து லாரியில் சோதனை நடத்தியதில், மருதையாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது.
இதுபற்றி கிராம உதவியாளர் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வருவதற்குள் கிராம உதவியாளரை மீறி டிரைவர் லாரியை எடுத்துச் சென்று விட்டார். லாரியின் பின்னால் பைக்கில் வந்த ஒருவரும் தப்பிச்சென்று விட்டார்.
இதுபற்றி விஏஓ கிருத்திகா குன்னம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் புஜங்கராயநல்லூர் கிராமத்தை சேர்ந்த காட்டுராஜா உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது 4 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.