குத்தாலம், ஜுலை 14: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 10 வகுப்பறை புதிய கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கல்வி அலுவலர் சாந்தி தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் வில்லவன்கோதை, முத்துக்கனியன், பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியராஜ், பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதாமாரியப்பன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சம்சுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உடற்கல்வி ஆசிரியர் சாமிநாதன் வரவேற்றார். முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி வாயிலாக பள்ளி புதிய கட்டிடத்தை திறந்து வைத்த நிலையில் மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ்.ராஜகுமார் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றினார்.
விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குத்தாலம் க.அன்பழகன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர்கள் மகேந்திரன், மனோகரன், 4வது வார்டு பேரூராட்சி மன்ற உறுப்பினர் சுகன்யா சுரேஷ், காங்கிரஸ் வட்டார தலைவர் ஜம்பு கென்னடி, ஒப்பந்தக்காரர் ராஜ்குமார், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுதா, நகர துணை செயலாளர் சட்டசெந்தில் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் சீனிவாசன் நன்றி கூறினார்.