கிருஷ்ணகிரி, ஆக.29: கிருஷ்ணகிரியில் நேற்று நடந்த முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் 955 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தது. மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் சிவப்பிரகாசம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜ் ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்து, மாணவர்களை வாழ்த்தினர். இதில், கல்லூரி மாணவர்களுக்கு, தடகளம், கூடைப்பந்து, கிரிக்கெட், கைப்பந்து, நீச்சல், மேசைப்பந்து மற்றும் ஹாக்கி ஆகிய போட்டிகளும், பொதுப்பிரிவு ஆண்களுக்கு தடகளம், குண்டு எறிதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல் போட்டிகளும் நடந்தது. போட்டிகளில், கல்லூரி மாணவர்கள் 725 பேர், ஆண்களுக்கான பொதுப்பிரிவில் 230 பேர் என மொத்தம் 955 பேர் கலந்து கொண்டனர். இப்போட்டிகள் கடந்த 26ம் தேதி துவங்கி அடுத்த மாதம் 12ம் தேதி வரை பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள், பொது மக்கள் என ஐந்து பிரிவுகளில், 37 விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு, முதல் பரிசாக ரூ.3 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.2 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.ஆயிரம் வழங்கப்பட உள்ளது. தனிநபர் போட்டிகளில் முதலிடம் பிடிக்கும் வீரர், வீராங்கனைகள், மாநில அளவிலான போட்டிகளுக்கு, அரசு செலவில் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
+
Advertisement