ஓசூர், ஆக.29: ஓசூர் தாசில்தார் குணசிவா மற்றும் அலுவலர்கள், நேற்று முன்தினம் மத்திகிரி பஸ் நிறுத்தம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டு இருந்த டிப்பர் லாரியை சோதனை செய்தனர். அதில், 2 யூனிட் மணல் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், மத்திகிரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, லாரியின் உரிமையாளர் மற்றும் டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், ஓசூர் அடுத்த பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் டேனியல்ராஜ் மற்றும் அலுவலர்கள், கந்திகுப்பம் தனியார் பள்ளி அருகில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டு இருந்த டிப்பர் லாரியை சோதனை செய்த போது, ஒரு யூனிட் ஜல்லிகற்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
+
Advertisement