கிருஷ்ணகிரி, செப்.27: ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணைக்கான நீர்வரத்து 1066 கன அடியாக குறைந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதேபோல் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி, ஓசூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது. நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): தளி 20, கிருஷ்ணகிரி 11.4, ஊத்தங்கரை 9.2 கேஆர்பி டேம் 9, அஞ்செட்டி 8.6, பாம்பாறு 8, நெடுங்கல் 8, போச்சம்பள்ளி 6.4, தேன்கனிக்கோட்டை 5, ஓசூர் 1.2, கெலவரப்பள்ளி 1, சூளகிரி 0.5 என மொத்தம் 88,3மில்லி மீட்டர் மழை பதிவாகியிருந்தது.
அதேசமயம் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 1384 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 1066 கன அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான 44.28 அடியில், 41.66 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு நேற்று முன்தினம் 731கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 580 கன அடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து 346 கனஅடி தண்ணீர் வீதம் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 49.05 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கேஆர்பி மற்றும் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.