Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மீன் வளர்ப்பு குளங்கள் அமைக்க வாய்ப்பு

கிருஷ்ணகிரி, செப்.27: பிரதம மந்திரியின், மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பயன்பெற 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தின் மூலம், பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் 2025&26ன் கீழ் மீன் வளர்ப்பு செய்திடும் விவசாயிகள் அதற்கான திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

அதன்படி, புதிய மீன்குஞ்சு வளர்ப்பு குளங்கள் அமைக்கும் திட்டத்தின் கீழ், ஒரு அலகுக்கு ஆகும் செலவினத் தொகை ரூ.7 லட்சத்தில், பொதுப்பணியாளிகளுக்கு 49 சதவீத மானியம் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம், பெண்கள் மற்றும் ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு 60 சதவீத மானியமாக ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இம்மாவட்டத்திற்கான இலக்கு 1.5 ஹெக்டேர் ஆகும். (பொது 1.0 ஹெக்டேர், பெண்கள் & 0.5 ஹெக்டேர்). புதிய மீன்வளர்ப்பு குளங்களுக்கு உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு அலகுக்கு ஆகும். செலவின தொகை ரூ.4 லட்சத்தில், பொதுப்பயனாளிகளுக்கு 40 சதவீத மானியம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம், பெண்கள் மற்றும் ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு 60 சதவீத மானமய் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மானியமாக வழங்கப்பட உள்ளது.

இம்மாவட்டத்திற்கான இலக்கு 1.0 ஹெக்டேர் ஆகும். சிறிய அளவிலான பயோபிளாக் குளங்களில், மீன்வளர்ப்பு செய்தலுக்கான மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ், ஆகும் செலவினத் தொகை ரூ.7 லட்சத்து 50 ஆயிரத்தில், பொதுப்பயனாளிகளுக்கு 40 சதவீதம் மானியம் ரூ.3 லட்சம், பெண்கள் மற்றும் ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு 60 சதவீத மானியம் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இம்மாவட்டத்திற்கான இலக்கு ஒரு அலகு ஆகும். இந்த திட்டங்களுக்கு இம்மாவட்டத்தில் உள்ள மீன் வளர்க்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெற ஏதுவாக உரிய ஆவணங்களுடன் வருகிற 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதிக விண்ணப்பங்கள் பெறப்படின் முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும், இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநுர் அலுவலகம், கிருஷ்ணகிரி அரசு மீன் பண்ணை எதிரில், கிருஷ்ணகிரி அணை என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.