ஊத்தங்கரை, செப்.26: கிருஷ்ணகிரியில், சரக்கு வாகனத்தை திருடிச் சென்ற திருப்பத்தூரை சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். ஊத்தங்கரை நாராயணன் நகரை சேர்ந்தவர் முருகன் (48). கடந்த சில நாட்களுக்கு முன் இவருக்கு சொந்தமான சரக்கு வாகனத்தை, முனியப்பன் கோயில் அருகில் நிறுத்தி வைத்திருந்தார். அந்த வாகனத்தை மர்மநபர்கள் கடத்திச் சென்றனர். இதுதொடர்பாக முருகன், ஊத்தங்கரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, தனிப்படை அமைத்து மர்மநபர்களை தேடி வந்தனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தனர். விசாரணையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பாப்பனேரியை சேர்ந்த மோகன்வேல் (25), அதே கிராமத்தைச் சேர்ந்த வேல்ஆனந்த் (26) ஆகிய இருவரும், வாகன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இரண்டு பேரையும், கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.
+
Advertisement