தேன்கனிக்கோட்டை, நவ.25: தேன்கனிக்கோட்டையில் ராகி அறுவடைக்கு ஆட்கள் கிடைக்காததால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம், அஞ்செட்டி பகுதியில் பிரதான பயிராக ராகி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அதில் ஊடுபயிராக சோளம், கடுகு, அவரை, துவரை, சாமை, குதிரைவாலி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்கின்றனர். ஆடி பட்டத்தில் விதைத்த ராகி, தொடர்ந்து பெய்த மழையால் செழித்து வளர்ந்து, தற்போது அறுவடைக்கு தயாராகி உள்ளது. தேன்கனிக்கோட்டை பகுதியில் கடந்த ஒரு வாரமாக ராகி அறுவடை நடைபெற்று வரும் நிலையில், அவ்வப்போது மழை பெய்து, வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் அறுவடை பணி பாதிப்படைந்துள்ளது. மேலும் கூலிக்கு ஆட்கள் கிடைக்காததால் அறுவடையை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். ராகி வயலில் ஊடுபயிர் விதைத்துள்ளதால் இயந்திரம் வைத்தும் அறுவடை செய்ய முடியதில்லை.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து வந்துள்ள 100க்கும் மேற்பட்ட யானைகள், தளி அருகே ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் முகாமிட்டுள்ளன. இதனால் ராகியை விரைவில் அறுவடை செய்ய மும்முரமாக ஈடுபட்டுள்ளோம். ஆனால், ரூ.700 வரை கூலி உயர்ந்துள்ள நிலையில், ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் ராகி பயிர் செய்துள்ள விவசாயிகள், ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்தால் கூட, ராகி வீட்டிற்கு வந்து சேர்வது சிரமமாக உள்ளது. கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்வதால் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது,’ என்றனர்.



