கிருஷ்ணகிரி, அக்.24: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், 101 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக, தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. ேமலும் தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் கிருஷ்ணகிரி, கெலவரப்பள்ளி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தொடர் மழையால் மாவட்டம் முழுவதும் ஏரிகள் நிரம்பி வருகின்றன. உள்ளாட்சி அமைப்புகளில உள்ள 1097 ஏரிகளில் 49 முழுமையாக நிரம்பி உள்ளன. பேரூராட்சிகளில் 58 ஏரிகளில் ஒன்றும் முழுமையாக நிரம்பவில்லை. நீர்வளத்துறை சார்பில் உள்ள 87 ஏரிகளில் 52 ஏரிகள் நிரம்பி உள்ளன.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘மாவட்டம் முழுவதும் 101 ஏரிகள் முழுமையாகவும், 77 ஏரிகள் நிரம்பும் தருவாயிலும் உள்ளன. 110 ஏரிகள் பாதிக்கும் மேல் நிரம்பி உள்ளன. 288 ஏரிகள் 26 முதல் 50 சதவீதமும், 446 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பி உள்ளன. 218 ஏரிகளுக்கு தண்ணீர் வரவில்லை. தொடர் மழையால் ஏரிகள் நிரம்பி உள்ள நிலையில், கரைகள் பலப்படுத்தும் பணிகளும், கண்காணிப்பு பணிகளும் நடந்து வருகின்றன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது,’ என்றனர்.

