கிருஷ்ணகிரி, அக். 23: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நடப்பாண்டு 32 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட எஸ்பி தங்கதுரை தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, பர்கூர், ஊத்தங்கரை ஆகிய 5 போலீஸ் உட்கோட்டங்களில், 31 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. மாவட்டத்தில் குற்றங்களின் தன்மைக்கு ஏற்ப, ரவுடிகள் பிரிக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. கொடூர கொலை குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த மாதம், கிருஷ்ணகிரியில் எல்லம்மாள், அவரது மகள் சுசிதா ஆகியோரை கொன்ற வழக்கில் கைதான நவீன்குமார் மற்றும் சத்தியரசு ஆகிய 2 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சூளகிரி அருகே உலகம் கிராமத்தில் கடந்த மாதம், ரவிசங்கர் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ரக்சித், ஆதி ஆகிய 2 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி தங்கதுரை கூறுகையில், ‘மாவட்டத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, தொடர் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து வருகிறோம். நடப்பாண்டு இதுவரை 32 பேர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்,’ என்றார்.
+
Advertisement