கிருஷ்ணகிரி, செப்.22: புரட்டாசி மாதம் மற்றும் மகாளய அமாவாசையையொட்டி கிருஷ்ணகிரியில் உள்ள இறைச்சி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலானோர் பெருமாளை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு பெருமாளை வழிபடுபவர்கள் மட்டுமின்றி, பெரும்பாலான இந்துக்கள் புரட்டாசி மாதத்தில் இறைச்சி உண்பதை தவிர்த்து விடுகின்றனர். கடந்த 17ம்தேதி புரட்டாசி மாதம் துவங்கியது முதல் இறைச்சி கடைகளில் விற்பனை சரிந்தது.
அத்துடன் ஓட்டல்களில் பிரியாணி போன்ற உணவுகள் விற்பனையும் சரிந்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை, ஆட்டு இறைச்சி மற்றும் மீன் கடைகள் ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடியது. அத்துடன் நேற்று மகாளய அமாவாசை என்பதால் இறைச்சி கடைகளில் ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. புரட்டாசி மாதம் முழுவதும் இதே நிலை நீடிக்கும் என்பதால் இறைச்சி விற்பனையாளர்கள் வியாபாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.