கிருஷ்ணகிரி, ஆக. 21: கிருஷ்ணகிரி அடுத்த மகாராஜகடை அருகேயுள்ள கே.பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன் (55). விவசாயியான இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இரவு நேரத்தில், அந்த பகுதியில் ஏரியின் அருகேயுள்ள பட்டியில், தனது ஆடுகளை கன்னியப்பன் அடைத்து வைப்பது வழக்கம். இதேபோல் நேற்று முன்தினமும், பட்டியில் ஆடுகளை அடைத்து வைத்தார். அங்கு இரவு 10 மணி வரை இருந்த கன்னியப்பன், பின்னர் வீடு திரும்பினார். நேற்று காலை பட்டிக்கு சென்றபோது, அதில் இருந்த 11 ஆடுகளை மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதன் மதிப்பு ரூ.75 ஆயிரம். இதுகுறித்து கன்னியப்பன் அளித்த புகாரின் பேரில், மகாராஜகடை போலீசார் வழக்கு பதிவு செய்து, இரவு நேரத்தில் பட்டிக்கு வந்து ஆடுகளை திருடிச்சென்ற மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement