வேப்பனஹள்ளி, அக். 14: வேப்பனஹள்ளி மற்றும் சுற்றப்புற கிராமங்கள் பெரும்பாலும் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. இதன் காரணமாக இப்பகுதியில் வழக்கமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படும். கடந்த ஒரு வாரமாக இப்பகுதி முழுவதும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மார்கண்டேயன் ஆறு, குப்தா ஆறு, ஆந்திர மாநிலம் ஓ.என்.கொத்தூர் ஏரி, வேப்பனஹள்ளியை ஒட்டியுள்ள துணை ஆறு ஆகிய பகுதிகளில் வெள்ளம் வர தொடங்கியுள்ளது. மேலும் வனப்பகுதியில் உள்ள திடீர் நீரூற்றுகளும் தோன்றி நீர் வழிந்தோடி வருகிறது. இதன் காரணமாக வயல்வெளிகளிலும் நீர் தேங்கியுள்ளது. வெள்ளப்பெருக்கின் காரணமாக ஆற்றில் அடித்து வரப்படும் மீன்களை உண்பதற்கும், இரையைத் தேடி வனப்பகுதியிலிருந்து கிராமப்புறங்களுக்கு ஏராளமான மலைப்பாம்புகள் ஊருக்குள் வருகின்றன. இவைகள் மீன்கள் மட்டுமின்றி, பட்டியில் அடைக்கப்பட்டுள்ள ஆடுகள், கோழிகள் மற்றும் நாய்களையும் கவ்வி சென்று விடுகின்றன. இதன் காரணமாக விவசாயிகள் வளர்த்து வரும் ஆடுகள் மற்றும் கோழிகள் மலைப்பாம்புகளுக்கு இரையாவதால் நஷ்டம் ஏற்பட்டு வருவதாக, விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
+
Advertisement