ஓசூர், செப்.14: சூளகிரி அருகே, பிள்ளைக்கொத்தூர் ஏரியில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதப்பதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த காமன்தொட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பிள்ளைக்கொத்தூர் கிராமத்தில் உள்ள ஏரி, காமன்தொட்டி மற்றும் அப்பகுதியில் உள்ள பாசன தேவை, குடிநீர் ஆதாரமாக உள்ளது. இந்த ஏரியில் டன் கணக்கில் மீன்கள் திடீரென செத்து மிதந்து வருகிறது. செத்து கிடக்கும் மீன்களால் ஏரி பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கிரானைட் தொழிற்சாலை கழிவுகள், கால்வாய் மூலம் ஏரியில் வெளியேற்றுவதே மீன்கள் உயிரிழக்க காரணம் என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘கிரானைட் தொழிற்சாலையின் கழிவுகளை சுத்திகரிக்காமல், தேக்கி வைத்து, மழைக்காலங்களில் கால்வாய்கள் மூலம் ஏரியில் வெளியேற்றுவதால், ஏரியில் உள்ள மீன்கள் இறந்து விடுகிறது. சில சமயங்களில் கால்நடைகளும் இறந்துள்ளன. இதுகுறித்து புகார் அளித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு, கிரானைட் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.