கிருஷ்ணகிரி, செப்.13: கிருஷ்ணகிரியில், பைக் மீது வாகனம் மோதி ஐடி ஊழியர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி அடுத்த பழையபேட்டை, பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் டோனி மெரில் குமார் (26). இவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்றுமுன்தினம் இரவு, 10 மணியளவில் சென்னையில் இருந்து கிருஷ்ணகிரிக்கு பைக்கில் டோனி மெரில்குமார் புறப்பட்டார். நேற்று அதிகாலை 4 மணியளவில் பர்கூர் அங்கினாயனப்பள்ளி பகுதியில் வந்தபோது பைக் மீது அவ்வழியாக வந்த வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த பர்கூர் போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து டோனி மெரில் குமார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement