போச்சம்பள்ளி, ஆக.13: போச்சம்பள்ளி அருகே பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை அச்சுறுத்திய விஷ வண்டுகளை தீயணைப்பு வீரர்கள் போராடி அழித்தனர். போச்சம்பள்ளி அருகே குடிமேனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் பட்டகரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த மாதன், தர்மன் ஆகியோரது விவசாய தோட்டங்கள் மட்டுமின்றி அப்பகுதியில் பல்வேறு இடங்களில் உள்ள மரங்களில் விஷ வண்டுகள் கூடு கட்டி இருந்தன. இந்த விஷ வண்டுகள், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாய பணிகள் செய்து வரும் விவசாயிகளை அச்சிறுத்தி வந்தன. விஷ வண்டுகள் கடித்ததால் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்து போச்சம்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான வீரர்கள், நேற்று முன்தினம் இரவு குடிமேன அள்ளி, பட்டகர அள்ளி ஆகிய கிராமங்களுக்கு சென்று, விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள மரங்கள் மற்றும் 40 அடி உயர பனை மரத்தில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகளை(கதண்டு) தண்ணீரை பீய்ச்சியடித்து அப்புறப்படுத்தினர். இதனால், அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் நிம்மதியடைந்துள்ளனர்.
+
Advertisement