கிருஷ்ணகிரி, நவ.12: கிருஷ்ணகிரி கலெக்டர் ஆபீசை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 165 பேரை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்கக்கோரி முற்றுகை போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட செயலாளர் பெரியசாமி தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் ஜெயராமன், கோட்டீஸ்வரன், வெங்கடேஷ், முருகன், மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரும்பாலும் உதவித்தொகையை நம்பியே மாற்றுத்திறனாளிகள் வாழ்ந்து வருகின்றனர். கிராமப்புறங்களில் 100 நாள் வேலை திட்டத்தில் பல மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை கிடைக்காத நிலை உள்ளது. சில இடங்களில் வேலை கொடுத்தாலும், முழுமையான கூலியை கொடுப்பதில்லை.
எனவே, தமிழக அரசு சாதாரண ஊனமுற்றோருக்கு வருவாய்த்துறை மூலம் ரூ.1,500 வீதமும், கடும் ஊனமுற்றோருக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ரூ.2000 வீதமும் உதவித்தொகையாக வழங்கி வருகிறது. இந்த உதவித்தொகை தற்போதைய விலைவாசி அடிப்படையில் எவ்விதத்திலும் போதுமானதாக இல்லை. எனவே, ஆந்திரா மாநிலத்தில் வழங்குவது போல், ஊனத்தின் தன்மைக்கேற்ப ரூ.6 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரம் என மாதாந்திர உதவித்தொகையாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அவர்களிடம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, 165 மாற்றுத்திறனாளிகளை, போலீசார் கைது செய்து, திருமண மண்டபத்தில் அடைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
