ஓசூர், அக். 8: ஓசூர்-பாகலூர் சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாகலூர் சாலையில் கிருஷ்ணர் கோயில், 20 அடி பிரமாண்ட ஆஞ்சநேயர் அமைந்துள்ளது. இந்த சாலையில், கழிவு நீர் கால்வாய் சரிவர இல்லாததால், மழை நீருடன் கழிவு நீர் கலந்து கோயில் முன்பு ஆறாக ஓடுகிறது. தாலுகா அலுவலகம், மகளிர் போலீஸ் ஸ்டேஷன், டவுன் போலீஸ் ஸ்டேஷன், உழவர் சந்தை, நீதிமன்றங்கள், ரயில்வே ஸ்டேஷன், பஸ் நிலையத்தில் இருந்து செல்பவர்களும், பஸ் நிலையத்திற்கு வருபவர்களும், இந்த சாலையை தான் பயன்படுத்துகின்றனர். கிராம மக்கள் விவசாயத்திற்கு தேவையான பொருட்கள், மளிகை பொருட்கள் வாங்க இந்த வழியாகத்தான் மற்ற பகுதிகளுக்கு செல்கின்றனர். அப்போது, டூவீலரில் செல்லும்போது கழிவுநீர் அவர்கள் மீது தெறிப்பதால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, இதை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
+
Advertisement