ஊத்தங்கரை, அக்.8: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கொம்மம்பட்டு கிராமத்தை சேர்ந்த தொழிலாளியின் 14 வயது மகன், உப்பாரப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த வாரம் காலாண்டு விடுமுறை முடிந்து, நேற்று பள்ளிக்கு திரும்பியபோது, கணித ஆசிரியர் முரளி என்பவர், காலாண்டு விடுமுறையில் கணித வினாத்தாளுக்கு விடைகள் எழுதி வருமாறு கூறி இருந்த நிலையில், மாணவன் விடைகள் ஏதும் எழுதாமல் பள்ளிக்கு வந்துள்ளார். மேலும் கணித பாடப்பிரிவில் 100க்கு 22 மதிப்பெண் எடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர், பிரம்பால் மாணவனை பின்பக்கம் அடித்ததில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த மாணவன், ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டான். இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement