கிருஷ்ணகிரி, ஆக.8: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே உள்ள மாவனட்டியை சேர்ந்தவர் சிவராஜ். இவரது மகன் ரோஹித்(13), 8ம் வகுப்பு மாணவன். கடந்த ஜூலை 2ம் தேதி வீட்டில் இருந்து மாயமான மாணவன், மறுநாள் (3ம்தேதி) கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தான். இதுகுறித்து அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அதே பகுதியைச் சேர்ந்த முத்தண்ணன் மகன் மாதேவன்(22), கர்நாடக மாநிலம் ராம் நகர் மாவட்டம் கனகபுரா அருகே உள்ள உனிசனஅள்ளியை சேர்ந்த மாரப்பா மகன் மாதேவா(21) ஆகிய 2 பேரும் சேர்ந்து, சிறுவனை கொலை செய்தது தெரியவந்தது.
கல்லூரி மாணவி ஒருவருடன், தான் நெருக்கமாக இருந்ததை மாணவன் நேரில் பார்த்து விட்டதால், வேறு யாரிடமாவது கூறி விடுவான் என்ற பயத்தில், மாதேவன் தனது நண்பருடன் சேர்ந்து சிறுவனை கொன்று உடலை 50 அடி ஆழ பள்ளத்தில் வீசியது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து தர்மபுரி சிறையில் அடைத்தனர். இவர்களை குண்டாசில் கைது செய்ய, ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியதம்பி, மாவட்ட எஸ்பி தங்கதுரைக்கு பரிந்துரை செய்தார். எஸ்பி.யின் பரிந்துரையை ஏற்று, கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவிட்டதன் பேரில், மாதேவன், மாதேவா ஆகிய 2 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.