கிருஷ்ணகிரி, ஆக.8: கிருஷ்ணகிரி அடுத்த தவளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஈஸ்வரன், தனது நிலத்தில் நெல், தக்காளி, வாழை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளார். எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காததால், மாற்று பயிர் சாகுபடி செய்யலாம் என முடிவு செய்து, அரபு நாட்டில் இருந்து பேரீச்சை கன்றுகளை வாங்கி வந்து, இயற்கை விவசாயம் மூலம் அதை சாகுபடி செய்தார். நன்கு வளர்ந்த பேரீச்சை மரங்களில் இருந்து கொத்து, கொத்தாக பேரீச்சை விளைந்துள்ளது. ஒரு கிலோ பேரீச்சம் பழத்தை ரூ.150க்கு, வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நண்பரின் ஆலோசனைப்படி, அரபு நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட பேரீச்சை கன்றுகளை, ஒரு ஏக்கர் பரப்பளவில் நடவு செய்தேன். நடவு செய்த 3வது ஆண்டில் இருந்து பேரீச்சம்பழம் விளைச்சல் தருகிறது. கடந்த ஆண்டை விட தற்போது, அதிக விளைச்சல் கிடைத்துள்ளது. ஒவ்வொரு குலையிலும் 10 முதல் 20 கிலோ வரை விளைந்துள்ளது. இன்னும் சில தினங்களில் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் கிலோ ரூ.150க்கு கொள்முதல் செய்ய வியாபாரிகள் தயாராக உள்ளனர். இதனால் நல்ல லாபம் கிடைக்கிறது,’ என்றார்.
+
Advertisement