போச்சம்பள்ளி, டிச.5: போச்சம்பள்ளி வட்டம், புங்கம்பட்டி கிராமம் நாகர்குட்டை பகுதியில் மலையடிவாரத்தில் பிரசித்தி பெற்ற நாகதேவதை கோயில் உள்ளது. இங்கு மூலவராக நாகதேவதை சிலையும், சிலையின் அடிப்பகுதியில் பாம்பு விடிவிலான உருவம் உள்ளது. இது இயற்கையாக உருவாகிய அமைப்பு ஆகும். ஆண்டுதோறும் தை மாதம் கரிநாள் அன்று நாகதேவதைக்கு திருவிழா நடப்பது வழக்கம். இந்த கோயில் அருகே உள்ள 200 அடி உயர கரடு மீது, 12 அடி உயமுள்ள நாகர் அம்மன் சிலை நிறுவப்பட்டு நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. தொடர்ந்து நாகதேவதை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோயிலில் பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகம் நடந்து முடிந்ததை அடுத்து, அடுத்து வரும் 24 நாட்களுக்கு சிறப்பு பூஜை நடைபெறவுள்ளது. துவக்க நாள் நிகழ்ச்சியாக நேற்று பக்தர்களுக்கு வடை, பாயசத்துடன் சமபந்தி விருந்து வழங்கப்பட்டது.
+
Advertisement

