ஓசூர், டிச.5: ஓசூரில் ஏஐடியூசி தெரு வியாபார தொழிலாளர் சங்கத்தினர், நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது: ஓசூர் மாநகராட்சி காமராஜ் நகர் காலனியில் உள்ள சாலையோர கடைகள், உழவர் சந்தை பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாக கூறி, கடந்த 2019ம் ஆண்டு ஐயப்பன் கோவில் தெரு, காமராஜ் காலனி பகுதியில் அதிகாரப் பூர்வமாக இடம் அமைத்துக் கொடுக்கப்பட்டது. இதுநாள் வரை எந்த ஒரு இடையூறும் இன்றி, பொதுமக்களுக்கு தொந்தரவும் இன்றி வியாபாரம் செய்து வருகிறார்கள். ஆனால், கடந்த 1ம்தேதி மாநகராட்சி ஊழியர்கள், இன்னும் ஓரிரு நாட்களில், இந்த கடைகளை காலி செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். எனவே, காமராஜ் காலனியில் உள்ள கடைகளை காலி செய்யாமல், வியாபாரிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர். அப்போது, சங்கத்தின் மாவட்ட செயலாளர் சின்னசாமி, மாவட்ட தலைவர் முபாரக், மாநகர செயலாளர் சங்கரய்யா உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
+
Advertisement

