ஓசூர், ஜூலை 24: சதுர்த்தி விழாவை முன்னிட்டு, ஓசூரில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஓசூரில் விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதனை முன்னிட்டு, ஓசூர் பகுதியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், சிலை வடிவமைக்கும் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஓசூரில் மட்டும் 250 இடங்களில் முகாமிட்டு விநாயகர் சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஓசூரில் தயார் செய்யப்படும் சிலைகளை தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா மாநிலத்திலிருந்து ஏராளமானோர் ஆர்டர் கொடுத்து வாங்கிச்செல்கின்றனர். இந்த விநாயகர் சிலைகள் களிமண், கிழங்குமாவு, காகிதக்கூழ் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லாத மூலப்பொருட்கள் மூலம் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் ஒருசில இடங்களில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் சிலைகள் தயார் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதை மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்து, ரசாயன கலப்பின்றி விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.