போச்சம்பள்ளி, ஆக.4: போச்சம்பள்ளி வாரச்சந்தையில், ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு நேற்று ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் நேற்று ஆடி 18ஐ முன்னிட்டு வாரச்சந்தை நடந்தது. அதிகாலையில் கால்நடை, அதை தொடர்ந்து தானியங்கள் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களின் சந்தை இரவு வரை நடைபெறும். ஆடி 18 பண்டிகை கொண்டாடப்படுவதால், நேற்று காலை கூடியது...
போச்சம்பள்ளி, ஆக.4: போச்சம்பள்ளி வாரச்சந்தையில், ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு நேற்று ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் நேற்று ஆடி 18ஐ முன்னிட்டு வாரச்சந்தை நடந்தது. அதிகாலையில் கால்நடை, அதை தொடர்ந்து தானியங்கள் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களின் சந்தை இரவு வரை நடைபெறும். ஆடி 18 பண்டிகை கொண்டாடப்படுவதால், நேற்று காலை கூடியது சந்தையில், வழக்கத்தை காட்டிலும் ஆடு, கோழி, மீன்கள் என அதிகளவில் காணப்பட்டது. விற்பனையும் ஜோராக நடைபெற்றது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், பெங்களூரூ, ஆந்திரா, கேரளா மாநில வியாபாரிகள் சந்தைக்கு வந்திருந்தனர். அது போல் உள்ளூர் விவசாயிகள் தங்கள் வளர்த்து வந்த ஆடுகளை அதிகளவில் விற்பனை கொண்டு வந்தனர். இதனால் அதிகாலை முதலே ஆடு வியாபாரம் களை கட்டியது.
மேலும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் ஆடு, கோழிகளை இஷ்ட தெய்வங்களுக்கு பலியிட்டு நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் கம கம கறி விருந்து வைப்பது வழக்கம். இதனால் நேற்று கோழி மற்றும் ஆடுகள் விற்பனை அமோகமாக நடந்தது. இதில், வெளி மாநில, மாவட்ட வியாபாரிகள் சந்தைக்கு வந்ததால் வழக்கத்தை காட்டிலும் ஆடுகள் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. கடந்த காலங்களில் 10 கிலோ கொண்ட ஒரு ஆடு ரூ.6000க்கு விற்பனை செய்யப்பட்டது ஆனால், நேற்று 10 கிலோ கொண்ட ஒரு ஆடு ரூ.7500 முதல் 8000 ஆயிரம் வரை விற்பனையானது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அது போல் நாட்டு கோழிகள் கிலோ ரூ.450க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று கிலோ ரூ.500 முதல் 600 வரை விற்பனை செய்யப்பட்டது. அது போல் மீன்களும் விற்பனை அமோகமாக காணப்பட்டது.