கிருஷ்ணகிரி, ஆக. 4: கிருஷ்ணகிரி அணையில் நடந்த ஆடிப்பெருக்கு விழாவில், ஆயிரக்கணக்கானோர் குவிந்து புனித நீராடி மகிழ்ந்தனர். புதுமண தம்பதிகள் தாலிக்கயிறு மாற்றிக் கொண்டு வழிபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஆடிப்பெருக்கு விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிருஷ்ணகிரி அணை, பாரூர் அருகே உள்ள மஞ்சமேடு, மத்தூர் அருகே உள்ள சேக்கனாம்பட்டி, போச்சம்பள்ளி அருகே உள்ள வலசகவுண்டனூர், வேப்பனஹள்ளி அருகே உள்ள தீர்த்தம், ஊத்தங்கரை அருகே உள்ள அனுமன்தீர்த்தம், ராயக்கோட்ைட அருகேயுள்ள வஜ்ரதீர்த்தம் ஆகிய இடங்களில் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர். கிருஷ்ணகிரி அணையில் உள்ள செல்லியம்மன் கோயில், அவதானப்பட்டி மாரியம்மன் கோயில், பச்சிகானப்பள்ளி மாரியம்மன் கோயில் மற்றும் அணையில் உள்ள மார்கண்டேய சுவாமி கோயில் ஆகிய இடங்களில் சிறப்பு பூஜைகளும், அணையில் சுவாமி வீதி உலாவும் நடத்தப்பட்டது. அத்துடன் மார்கண்டேயன் சுவாமி கோயில் எதிரில் உள்ள பசு சிலையின் வாயில் இருந்து கொட்டும் தண்ணீரில் ஏராளமான பக்தர்கள் குளித்து, சாமி தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணகிரி அணையில் உள்ள செல்லியம்மன் சுவாமி சிலை முன் பேய் ஓட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு, தங்களது தலைக்கு மேல் இரு கைகளையும் உயர்த்தி கொள்ள, பூசாரி அவர்களின் கைகளை சாட்டையால் அடித்தார். மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்டங்களில் இருந்தும், அண்டைய மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் ஏராளமானோர் கிருஷ்ணகிரி அணையில் தங்கள் குடும்பத்தினருடன் குவிந்தனர்.
நேற்று மட்டும் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அணைக்கு வந்தனர். அவ்வாறு வந்தவர்கள் அணை பூங்காவில் தங்கள் குழந்தைகளை அங்குள்ள விளையாட்டு சாதனங்களான சருக்கு பலகை, ஊஞ்சல் உள்ளிட்டவைகளில் விளையாட விட்டு மகிழ்ந்தனர். அத்துடன் கிருஷ்ணகிரி அணைக்கு வந்தவர்கள், அணையையும், பூங்காவையும் சுற்றி பார்த்துவிட்டு, அணையின் மேல்பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட மீன் கடைகளுக்கு குடும்பம் குடும்பமாக சென்று, மீன் வருவல், மீன் சாப்பாடு, குழம்புடன் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
மேலும், கிருஷ்ணகிரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அவதானப்பட்டி சிறுவர் பூங்காவிற்கு சென்று, பூங்காவில் விளையாடி, படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். கிருஷ்ணகிரி அணை மற்றும் அவதானப்பட்டி சிறுவர் பூங்காவில் ஏராளமானோர் கூடியதால், எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க மாவட்ட எஸ்பி., தங்கதுரை உத்தரவின் பேரில் 100க்கும் மேற்பட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர் மற்றும் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளியில் உள்ள மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் மாதேஸ்வரன் சுவாமி கோயிலில், நேற்று ஆடிப்பெருக்கையொட்டி அரூர், பர்கூர், போச்சம்பள்ளி, சந்தூர், மத்தூர், காரிமங்கலம், செங்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் புனித நீராடினர். மேலும் புதுமண தம்பதிகள் தாலிக்கயிறு மாற்றியும், அரிசி உள்ளிட்ட பூஜை பொருட்களை வைத்து கட்டி கொண்டு ஆசி பெற்றனர்.
ராயக்கோட்டை: ராயக்கோட்டை வஜ்ஜிரநாதேஸ்வரர் கோயிலில் உள்ள வஜ்ஜிர தீர்த்தத்தில், நேற்று காலை முதலே ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து விநாயகர் மற்றும் ஈஸ்வரலிங்கத்தை தரிசனம் செய்தனர். புது மணத்தம்பதிகள் தாலிக்கயிற்றை மாற்றி வழிபட்டனர்.