கிருஷ்ணகிரி, ஆக.3: கிருஷ்ணகிரியில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் பல்வேறு அரசுத்துறை அலுவலர்களுக்கு ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் தொடர்பான திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில், பல்வேறு அரசுத்துறை அலுவலர்களுக்கு ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்பான திறன் மேம்பாட்டு பயிற்சி, கிருஷ்ணகிரி மாவட்ட காலநிலை மாற்ற இயக்க தலைவரும், கலெக்டருமான தினேஷ்குமார் தலைமையில் நேற்று நடந்தது.
இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ்நாடு அரசு காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மற்றும் சிறப்பாக எதிர்கொள்ள தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 2022ம் ஆண்டு ஜூன் மாதத்தில் 38 மாவட்டங்களிலும், மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் தொடங்கப்பட்டது. இது தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் எனும் மாநில திட்டத்தின் ஒரு பகுதியாகும். உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு அலுவலகங்களில், சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளை பின்பற்ற தேவையான திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குதல் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் குறிக்கோள் ஆகும்.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு அரசுத்துறை அலுவலர்களுக்கு, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்பான திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டது. இதில் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் மஞ்சப்பைகள் மற்றும் எவர்சில்வர் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது என்றார்.