ஓசூர், அக்.26: ஓசூர் பகுதியில் செண்டுமல்லி விலை சரிவால், பூக்களை பறிக்காமல் தோட்டங்களிலேயே விட்டுள்ளதால் வாடி வதங்கி வீணாகி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மற்றும் சுற்றியுள்ள பாகலூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை பகுதியில் சாமந்தி, செண்டுமல்லி, ரோஜா சாகுபடி செய்துள்ளனர். தோட்டத்தில் அறுவடை செய்யும் பூக்களை ஓசூர் மலர் சந்தைக்கு கொண்டு வந்து, அங்கிருந்து பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கின்றனர். தொடர் மழை மற்றும் இதமான சீதோஷ்ண நிலையால் மகசூல் அதிகரித்து சந்தைக்கு பூக்கள் வரத்து இரட்டிப்பாகியுள்ளது. ஆனால், விழாக்கால சீசன் இல்லாததால், பூக்களின் தேவை குறைந்துள்ளது. இதனால், பூக்களின் விலை வழக்கத்தை விட மிகவும் குறைந்துள்ளது. கடந்த மாதம் செண்டுமல்லி கிலோ ரூ.30 முதல் ரூ.70 வரையிலும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது தரத்திற்கேற்றாற்போல் கிலோ ரூ.12 முதல் ரூ.20 வரையிலும் சரிந்துள்ளது.
சொட்டு நீர்பாசனம் மூலம் சாகுபடி செய்த செண்டுமல்லி அறுவடைக்கு தயாரக இருந்தும், விலை கிடைக்காததால் அறுவடை கூலி மற்றும் போக்குவரத்து செலவிற்கு கூட வருவாய் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பாகலூர் மற்றும் பேரிகை, சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அய்யூர், பெட்டமுகிலாளம் உள்ளிட்ட பகுதிகளில் பூக்களை அறுவடை செய்யாமல் தோட்டத்திலேயே விட்டுள்ளனர். சுட்டெரிக்கும் வெயிலுக்கு பூக்கள் வாடி வதங்கி வருவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
