கிருஷ்ணகிரி, நவ.15: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்றும்(15ம் தேதி), நாளையும்(16ம் தேதி) 1,096 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்வது குறித்த உதவி மையங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் -2026, வாக்காளர் படிவம் நிரப்புவது குறித்த விழிப்புணர்வு ஆட்டோ பிரசார வாகனத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் தினேஷ்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கடந்த 4ம் தேதி முதல் வீடு வீடாக கணக்கெடுப்பு படிவங்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர்களுக்கு 2 படிவங்கள் வழங்கப்பட்டு வருகிறது. வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்திசெய்து, சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒரு படிவத்தை கையொப்பமிட்டு திரும்ப வழங்கவேண்டும். மற்றொரு படிவத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் ஒப்புகை பெற்று, தாங்களே வைத்துக்கொள்ள வேண்டும். வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்வதில் உதவி வழங்கிட, இன்று(15ம் தேதி) மற்றும் நாளை(16ம் தேதி) ஆகிய 2 நாட்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1,096 வாக்குச்சாவடி மைய அமைவிடங்களிலும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் பொதுமக்களுக்கு உதவிபுரிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்களை கொண்டு படிவங்களை பூர்த்திசெய்து பெற்றுக் கொள்ளப்படும். வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின், தாங்கள் வாக்களிக்கும் வாக்குச்சாவடிமைய அமைவிடங்களில் உள்ள உதவி மையங்களை அணுகி, தங்களது கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து, அங்கேயே திரும்ப ஒப்படைக்கலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
தொடர்ந்து, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன எல்இடி வீடியோ வாகனம் மற்றும் கிருஷ்ணகிரி நகராட்சி சார்பாக, நகராட்சி வாகனங்கள் மூலம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் -2026 மற்றும் வாக்காளர் படிவங்கள் பூர்த்தி செய்வது குறித்த விழிப்புணர்வு குறும்படத்தை, மாவட்ட, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (ஊரக வளர்ச்சி) ராமஜெயம், பிஆர்ஓ மோகன், உதவி திட்ட அலுவலர் அருள்மொழிதேவன், தேர்தல் தாசில்தார் சம்பத், தாசில்தார் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் உமாசங்கர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
