கிருஷ்ணகிரி, நவ.15: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடப்பாண்டு 11ம் வகுப்பு பயிலும் 14,514 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார். தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நேற்று காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இருந்து காணொலி மூலம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் பணிகளை துவக்கி வைத்தார்.
இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பர்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் பணியை மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், பர்கூர் மதியழகன் எம்எல்ஏ ஆகியோர் துவக்கி வைத்தனர்.
விழாவில் கலெக்டர் பேசியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மாணவ, மாணவிகள் பள்ளி செல்ல ஏதுவாக விலையில்லா சைக்கிள்கள், விலையில்லா சீருடை, புத்தகங்கள், காலணிகள் போன்றவற்றை வழங்கி வருகிறது. அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ், காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6ம் வகுபபு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 மற்றும் மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் ரூ.1000 வீதம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
மேலும், பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள், பள்ளி செல்ல ஏதுவாக விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டில் (2025 -26) மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் 14,514 சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக தற்போது பர்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் 217 மாணவிகளுக்கு ரூ.10 லட்சத்து 32 ஆயிரத்து 920 மதிப்பிலும், பர்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 150 மாணவர்களுக்கு ரூ.7 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பிலும் மொத்தம் 367 மாணவ, மாணவிகளுக்கு ரூ.17 லட்சத்து 67 ஆயிரத்து 920 மதிப்பிலான சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த சைக்கிள்களை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் பத்மலதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமார், பர்கூர் பேரூராட்சி தலைவர் சந்தோஷ்குமார், கல்வி ஆய்வாளர் ஜெயராமன், பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி, தாசில்தார் சின்னசாமி மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
