தேன்கனிக்கோட்டை, நவ.11: தேன்கனிக்கோட்டையில் சாலை ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் 40 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். மக்கள் தொகை பெருக்கம் காரணமாக, நகரை சுற்றியுள்ள விவசாய நிலங்கள் பிளாட்களாக மாறி குடியிருப்புகள், கடைகள், வணிக நிறுவனங்கள் கட்டி வருகின்றனர். தாலுகா தலைமையிடமாக உள்ளதால், சுற்றியுள்ள 850க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்கு தேன்கனிக்கோட்டைக்கு வந்து செல்கின்றனர். அதேவேளையில், ஓசூர் மெயின் ரோடு, நோதாஜி ரோடு, அஞ்செட்டி ரோடு ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. சாலைகளை ஆக்கிரமித்து டீக்கடை, பலகார கடை, தள்ளுவண்டி கடை, கபாப் கடைகள் அமைத்துள்ளதால், பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது. இதனால், விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.
மேலும், பஸ் ஸ்டாண்ட் அருகிலேயே பத்திரப்பதிவு அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளதால், எப்போதும் மக்கள் நடமாட்டம் காணப்படுகிறது. நாள் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பத்திர பதிவிற்காக மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக கர்நாட மாநிலத்திலிருந்து தினமும் 100க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் வந்து செல்கின்றன. சாலையிலேயே கார்களை விதி மீறி நிறுத்திச்செல்வதால் கனரக வாகனங்கள், பஸ், லாரிகள் வந்து செல்கின்றன.இது தவிர, காலை -மாலை நேரங்களில் 100க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி வாகனங்கள், 100க்கும் மேற்பட்ட கார்மெண்ட்ஸ் கம்பெனி வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலைகளை அகலப்படுத்த வேண்டும். மேலும், டிராபிக் போலீசாரை நியமித்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

