கிருஷ்ணகிரி, நவ.11: கிருஷ்ணகிரி அணைக்கான நீர்வரத்து 2வது நாளாக 728 கனஅடியாக நீடித்தது.தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் கெலவரப்பள்ளி அணை நீர்திறப்பை பொறுத்து, கிருஷ்ணகிரி அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. அதன்படி, கடந்த 2 நாட்களாக நீர்வரத்து 728 கனஅடியாக நீடிக்கிறது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது நீர்மட்டம் 50 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீர் முழுவதும் ஆற்றிலும், பாசனத்திற்காக வலது மற்றும் இடதுபுற கால்வாய்களில் திறந்து விடப்பட்டுள்ளது.
மேலும், பாரூர் ஏரியின் மொத்த உயரமான 15.60 அடிக்கு தண்ணீர் நிரம்பி உள்ளதால், ஏரிக்கு வந்து கொண்டிருக்கும் 18 கனஅடி தண்ணீர், கால்வாய்கள் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது. ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 300 கனஅடியாக உள்ளது. அணையின் மொத்த உயரமான 19.60 அடியில், தற்போது நீர்மட்டம் 17.60 அடியாக உள்ளது. இதனால், அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதே போல், சூளகிரி சின்னாறு அணையின் மொத்த உயரமான 32.80 அடிக்கு தண்ணீர் நிரம்பி உள்ளது. இதனால், அணைக்கு வரும் 6 கனஅடி தண்ணீரும் அப்படியே திறந்து விடப்பட்டுள்ளது.

