கிருஷ்ணகிரி, ஆக.11: கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று (11ம் தேதி) பெருந்திரள் போதை பொருள் எதிர்ப்பு உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: போதையில்லா தமிழ்நாடு என்பதை உருவாக்கும் பொருட்டு, இன்று (11ம் தேதி) தமிழக முதல்வர் தலைமையில் பெருந்திரள் போதை பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சி தமிழ்நாடு முழுவதும் கல்வி நிறவனங்களான பள்ளிகள், கல்லூரிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் பெருந்திரள் போதை பொருள் எதிர்ப்பு உறுதிமொழி நிகழ்ச்சி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் இன்று (11ம் தேதி) காலை 10.30 மணியளில் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து கல்லூரி மாணவர்களால், போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற உள்ளது. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து அலுவலகங்களிலும் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட உள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.