Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாவட்ட நிர்வாகத்துடன் விவசாயிகள் ஒத்துழைத்தால் அரசம்பட்டி தென்னைக்கு உரிய அங்கீகாரம் பெறலாம்கலெக்டர் பேச்சு

போச்சம்பள்ளி, செப்.3: கிருஷ்ணகிரி மாவட்டம் அரசம்பட்டியில் நடந்த உலக தேங்காய் தின திருவிழாவில், மாவட்ட நிர்வாகத்தோடு விவசாயிகள் கைகோர்த்து செயல்பட்டால், அரசம்பட்டி தென்னைக்கு உரிய அங்கீகாரம் பெற்றுக்கொடுக்கலாம் என கலெக்டர் பேசினார். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம், கோட்டப்பட்டி கிராமம் அரசம்பட்டி ஜெ.கே.365 தென்னை ஆராய்ச்சி மையத்தில், உலக தேங்காய் தின திருவிழாவை, கலெக்டர் தினேஷ்குமார் நேற்று தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2ம் நாள், உலக தென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், தற்போது தென்னை தின விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், தென்னை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், மூலிகைச் செடிகள், இயற்கை வேளாண்மை குறித்து கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தென்னை என்றாலே பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகள் என்றிருக்கும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் அரசம்பட்டியில் உற்பத்தி செய்யப்படும் தென்னை நாற்றுகளை, தமிழகம் மற்றும் அண்டைய மாநிலங்களில் உள்ள விவசாய பெருமக்கள் விரும்பி வாங்கி சென்று நடவு செய்கிறார்கள். விவசாய பெருமக்கள், மாவட்ட நிர்வாகத்தோடு கைகோர்த்து செயல்பட்டால், அரசம்பட்டி தென்னைக்கு உரிய அங்கீகாரத்தை பெற்றுக்கொடுக்கலாம். தென்னை மற்றும் தென்னை பொருட்கள் மூலம் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்து, உலகளாவிய பிராண்டாக கொண்டு செல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

அதேபோல், நமது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் தென்னை மரங்கள் உள்ளன. வருடத்திற்கு 6 லட்சம் பனை விதை வைத்து, பனை மரங்கள் வளர்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது 3.4 லட்சம் பனை விதைகள் இருப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பனை பொருட்கள் மூலம் மதிப்பு கூட்டுப் பொருட்களை உற்பத்தி செய்யலாம். தற்போது ஓசூரில் உள்ள பெருநிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியின் கீழ், ஒரு வருடத்திற்கு 12 லட்சம் பலவகை மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் நர்சரி அமைக்கும் பணிகள் உருவாக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கலெக்டர் பேசினார்.

முன்னதாக, தென்னை மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள், மூலிகை செடிகள், இயற்கை வேளாண்மை கண்காட்சியை, கலெக்டர் தினேஷ்குமார் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட எஸ்பி தங்கதுரை, பத்திரிக்கை ஆசிரியர் நக்கீரன் கோபால், பையூர் தோட்டக்கலை கல்லூரி ஆராய்ச்சி நிலைய முதல்வர் அனிசாராணி, தோட்டக்கலை இணை இயக்குநர் இந்திரா, செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லூரி மற்றும் அதியமான் வேளாண் கல்லூரி ஆராய்ச்சி நிலைய செயலாளர் டாக்டர்.லாசியா தம்பிதுரை, அரசம்பட்டி தென்னை விவசாயிகள் சங்கம் மற்றும் தென்னை உற்பத்தி ஆராய்ச்சியாளர் கென்னடி, ஓய்வு பெற்ற வேளாண் இணை இயக்குநர் பச்சையப்பன், தாசில்தார் சத்யா மற்றும் தென்னை விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.