Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அக்டோபரில் கிருஷ்ணகிரிக்கு 100 யானைகள் வர வாய்ப்பு

கிருஷ்ணகிரி, செப்.2: கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து, அடுத்த மாத இறுதியில் 100 யானைகள், கிருஷ்ணகிரிக்கு வர வாய்ப்புள்ளது. இதனை தடுக்க வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 1,501 சதுர கி.மீ., பரப்பளவுள்ள ஓசூர் வனக்கோட்டத்தில் 1,190 சதுர கி.மீ பரப்பில், காவிரி வடக்கு மற்றும் தெற்கு வன உயிரின சரணாலயங்கள் அமைந்துள்ளன. இப்பகுதியில் 468 வகையான தாவரங்கள், 36 வகையான பாலூட்டிகள், 272 வகையான பறவை இனங்கள், 172 வகை வண்ணத்துப்பூச்சிகள் உள்ளன. அத்துடன், தேக்கு, ஈட்டி, சந்தனம், ஜாலாரி, உசில், ஆச்சான் மற்றும் பொருசு மர வகைகளும், யானைகள், சிறுத்தைகள், காட்டெருமைகள், புள்ளி மான்கள், கடமான், கரடிகள், மயில்கள், எறும்புத்தின்னிகள், அரியவகை விலங்குகளான சாம்பல் நிற அணில்கள், எகிப்திய கழுகுகளும் உள்ளன. மேலும், அதிக எண்ணிக்கையில் யானைகள் உள்ளன. குறிப்பாக ஊடேதுர்க்கம், சானமாவு, நொகனூர், அய்யூர், ஜவளகிரி, பனை, உளிபண்டா, மகாராஜகடை, வேப்பனஹள்ளி, உடுபராணி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டு, உரிகம், தக்கட்டி, கெஸ்தூர், மல்லஹள்ளி ஆகிய பகுதிகளில் ஏராளமான யானைகள் உள்ளன. அதன்படி, 300க்கும் மேற்பட்ட யானைகள் தற்போது இம்மாவட்ட வனப்பகுதியில் உள்ளன.

இந்நிலையில், ஆண்டுதோறும் அக்டோபர் மாத இறுதியில், கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட யானைகள், கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிக்குள் வருகின்றன. ராகி பயிர் அறுவடையை குறி வைத்து வரும் இந்த யானைகள், சுமார் 4 மாதங்கள் முகாமிட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாய நிலங்களை சேதப்படுத்துகின்றன. அவ்வாறு வரும் சமயங்களில் பயிர் சேதமும் அதிகமாக இருக்கின்றன. அதே போல யானைகள் தாக்கி, உயிரிழப்புகளும் நடந்து வருகின்றன. சில சமயங்களில் யானைகளும் மின்சாரம் தாக்கியும், கிணற்றில் விழுந்தும், ரயில் பாதையை கடக்கும் போதும் என பல்வேறு வகையில் இறப்புகளை சந்திக்கின்றன.

இதனிடையே, நடப்பாண்டு வழக்கம் போல அடுத்த மாதம் (அக்டோபர்) இறுதியில் கர்நாடக மாநிலம், பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து யானைகள் வரக்கூடும் என வனத்துறையினர் எதிர்பார்க்கிறார்கள். இந்த யானைகள் வனப்பகுதியில் இருந்து, கிராமங்களுக்குள் வரும் முக்கிய பாதைகளில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு, யானைகளின் நடமாட்டங்களை கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் யானைகள் வராத வகையில், இரும்புவட கம்பி வேலிகள் அமைக்கும் பணியும் நடந்துள்ளது. இன்னும் ஒரு மாதத்தில், கர்நாடக மாநிலத்தில் இருந்து யானைகள் வரக்கூடும் என்பதால், அதற்கேற்ப தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக வனப்பகுதியையொட்டிய கிராமங்களில் விழிப்புணர்வு மேற்கொள்வது. யானைகளின் நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிப்பது, யானைகளை விரட்ட தேவையான அளவு பட்டாசுகள் தயார் செய்து வைப்பது என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.