கோவை, அக்.31: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘‘ஒன்றிய அரசு 2020ம் ஆண்டு முதல் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பின் காரணமாக 5 மின்சார திருத்த மசோதாக்களை கைவிட்டது. தற்போது ஆறாவது முறையாக மின்சார திருத்த மசோதா -2025ஐ அறிமுகப்படுத்தி அனைத்து மாநிலங்களின் கருத்துகளையும் கேட்டுள்ளது.
இந்த மசோதாவின் மூலமாக மானியங்கள், வேளாண் உரிமை மின்சார இணைப்புகள், வீடுகளுக்கான 100 யூனிட் மின்கட்டண சலுகை, விசைத்தறிகளுக்கான 750 யூனிட் மின்கட்டண சலுகை உள்ளிட்டவை ரத்து செய்ய வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. மேலும் தற்போதுள்ள மின் கட்டணத்தை 80 சதவீதம் உயர்த்த வேண்டுமெனவும், தனியார் மின்சார நிறுவனங்கள் மின்சார வணிகத்தில் ஈடுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா தமிழ்நாட்டில் உள்ள 2 கோடி குடும்பங்களையும், 23 லட்சம் விவசாயக் குடும்பங்களையும், 4 லட்சம் விசைத்தறியாளர்கள் குடும்பங்களையும் நேரடியாக பாதிக்கும் வகையில் உள்ளது. இம்மசோதா நிறைவேறினால் ஒவ்வொரு விவசாயியும் 2 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.20 ஆயிரம் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை வரும். இதனால் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறுவார்கள். உணவு உற்பத்தி பாதிக்கப்படும். எனவே மின்சார சட்ட திருத்த மசோதா -2025ஐ திரும்ப பெற பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
  
  
  
   
