கோவை, அக். 31: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தமிழக அரசின் வெற்றி நிச்சயம் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் சார்ந்த மண்புழு உர உற்பத்தியாளர் பயிற்சி நேற்று துவங்கியது. பயிர் மேலாண்மை இயக்ககம், உழவியல் துறை, மத்திய பண்ணை பிரிவு சார்பில் நடந்த பயிற்சியின் துவக்க விழாவில், உழவியல் துறை பேராசிரியர் திருக்குமரன் வரவேற்றார்.
துறைத்தலைவர் கிருஷ்ணன் அங்கக மேலாண்மையில் மண்புழு உரத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் நன்மைகளை பற்றி விவரித்தார். மேலும், உழவியல் பேராசிரியர் வையாபுரி, மண்புழு உரத்தை சந்தைப்படுத்துதல் பற்றி பயனாளிகளுக்கு எடுத்துரைத்தார்.
இந்த பயிற்சியில் மண்புழு உரத் தயாரிப்புக்கு தேவையான இடுபொருட்கள் மற்றும் உபகரணங்கள், பண்ணை கழிவுகளை சேகரித்தல் மற்றும் மக்க வைத்தல், உர தயாரிப்பு செயல்முறை, மண்புழு உரத்தொட்டி பராமரிப்பு, மண்புழு உரம் அறுவடை மற்றும் தரம் பிரித்தல், சந்தைப்படுத்துதல் போன்ற தொழில்நுட்பங்களை பற்றி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 26 நாட்கள் நடைபெறும் இந்த திறன் மேம்பாட்டு பயிற்சியில் 25 பேர் பங்கேற்றனர்.
 
  
  
  
   
